செவ்வாய், 29 டிசம்பர், 2015


                                 குமாரபர்வதம்
                 (Kumara parvatham, karnadaka)

மேற்குமலை தொடரில் அடர்ந்த வனத்தையும், ஆறுகளையும், பச்சை புற்களை கம்பளமாக விரித்தும் ... இயற்கையின் பிரமாண்டத்தை கண்டு விழிகளை விரிய செய்கிற இடமாக இருக்கிறது.. ‪#‎குமாரபர்வதம்‬.

பயணதிற்கு பல நாட்களாக திட்டமிடபட்டு, நண்பர்களை ஒருங்கிணைத்து, facebook, watsappனு தகவல்களை பகிர்ந்து.. தினமும் நடைபயிற்சி, உணவு முறையில் சில மாறுதல்கள்னு Rajeev Nellai அண்ணாவிடம் இருந்து குறிப்புகள் வந்துகொண்டே இருக்கும். இதுவரை (29) இத்துனை நண்பர்களுடன் பயணித்தில்லை. உடன் வந்த நண்பர்களில் பலரை சந்தித்தது கூட இல்லை. அவர்களை சந்திக்கும் ஆவலும் கூடி கொண்டே சென்றது. பயணதிற்கான நாளும் வந்தது. நண்பர்கள் அனைவரும் குக்கே சுப்ரமண்யாவில் சந்தித்தோம்..

மங்களூருக்கு அருகே இருக்கிறது குக்கே சுப்ரமண்யா, கர்நாடகாவில் பிரசித்தி பெற்ற முருகர் கோவில். பெயரே வித்யாசமாக இருக்கிறது என தெரிந்தவர்களிடம் விசாரித்ததில், கன்னடத்தில் குக்கே அப்டினா கூடைனு அர்த்தமாம்.

சுப்ரமண்யாவில் இருந்து தான் எங்கள் குழுவின் மலையேற்றம் தொடங்குகிறது. 5617 அடி உயரத்தில் இருக்கும் குமாரபர்வதத்தை அடைய 13 கி.மீ. நடைபயணம் தான் வேற வழியே இல்லை. இந்த மலையை புஷ்பகிரிமலைனும் சொல்றாங்க ..

நண்பர்களின் சந்திப்பு அறிமுகதிற்கு பிறகு மாலைவேளையில் கோவிலுக்கு செல்ல சிறிது நேரம் கிடைத்தது.

கிழக்கு நோக்கி உயரமான கோபுரத்துடன், சற்று வித்தியாசமாக வண்ண கலவை ஏதுமில்லாமல் வெண்மை நிறத்தில், தங்க நிற கலசத்துடன் வரவேற்றது கோவில் கோபுரம்.

தெருக்களில், மக்கள் கோவிலை நோக்கி விரைவாக நடந்துகொண்டிருந்தார்கள்.
" கோவிலுக்கு போக ஏன் இப்படி வேக நடைனு என்னுடன் வந்த வாத்தியாரிடம் கேட்டதும், நடை சாத்தபடும் நேரம் ஆயிடுச்சுனு சொன்னதும்.. வாத்தியாருக்கு முன்னாடி வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.

கோபுரத்தை வணங்கி, கடந்து உள்ளே சென்றதும் இடது புறம் வரிசையாக மக்கள் நிற்க இப்படிதான் போகனுமோனு கேட்க ... அது உணவுக்கான வரிசை, எத்துனை ஆயிரம் பேர் வந்தாலும் அள்ள அள்ள குறையாத அக்ஷய பாத்திரம் போல எல்லோருக்கும் உணவு கிடைக்கும்னு சொன்னாங்க.

"டங் டங்" மணி ஓசை சாப்பாட்டிலிருந்து கந்தனை நோக்கி மனதை திருப்பியது. அடுத்து உள்ள பிரகாரம் போகனும்னா ஆண்கள் மேல் சட்டையில்லாமல் போகனும். நாங்க ஆல்ரெடி தயாராக வந்ததால் கந்தனை காண பிரகாரதிற்குள் சென்றோம்.

கோவிலினுள் இரவு பூசை காண மக்கள் வரிசையாக நிற்க.. நாங்களும் காத்திருந்தோம். வெளி பிரகாரத்தில் பல்லக்கு தயாராக இருந்தது. கோவில் யானையும் தலையை ஆட்டி கொண்டே, சாய்ந்து ஆடி கொண்டிருந்தது..
நிசப்தமாக இருக்க .. திறை அகற்றபட்டதும் சுப்ரமண்யர் தீப ஓளியில் காட்சிக்கொடுக்க, பல மொழிகளில் மக்களின் குரல் சுப்ரமண்யரை துதிப்பதை கேட்கமுடிந்தது. கோவிலின் வெளிபிரகார தூண்களில் நிறைய பாம்பாக செதுக்கிஇருக்கிறார்கள். அதுவும் வைஷ்ண சம்பரதாய திருமண் சின்னமிட்டு வித்யாசமாக இருக்கு. இந்த ஊரில் பாம்புகள் நிறைய இருக்குமாம்.இந்த ஊரில் வசிக்கும் சில குடும்பங்களில், புடலங்காய் பாம்பை போல இருப்பதால் உணவில் சேர்க்கமாட்டார்களாம். ஆச்சரியமாக இருக்கு ..

கோவிலின் வலது பக்கம் மத்வாச்சரிய மடம் இருக்கு. ஒரு மேடையில் இருக்கும் சிலைக்கு சிலர் பூசணிக்காயை வைத்து வழிபட்டார்கள். யாரு இவருனு விசாரிச்சப்போ,
"வள்ளாலராயர்"னு சொன்னாங்க.

மத்வாச்சரியர் காலத்தில் குமாரதார நதியில் கிடைத்த சாளகிராம கல் இருந்த பெட்டியை திறக்க உத்தரவிட்ட வள்ளாலராயரின் உடலில் ஏற்பட்ட எரிச்சலை போக்க பிராய்சித்தமாக தன் உருவத்தை சிலையாக செய்து வைத்துள்ளார்னு சொல்றாங்க. இரவு பூசை முடிந்ததும் இவருக்கும் தீபம் காட்டபடுகிறது.

கேரள கோவிலின் கட்டிட அமைப்பை நினைவுபடுத்தும் விதமாக கோவிலின் அமைப்பும் இருக்கிறது. எனக்கு தோன்றியது என்னவென்றால் ஆதிசங்கரர் சண்மார்கத்தை நிறுவிய பின் ஒன்றுடன் ஓன்று தொடர்புடையது என்பதை குறிக்க சில மடங்களில் செய்த மாற்றம் தான் இங்கும் நிகழ்ந்திருக்குமோ...
ஆதி சங்கரர், மத்வாச்சாரியர் போன்றவர்களின் காலடி தடம் பதிந்த இடத்தில் நிற்கிறோம்னு நினைக்கும் போது இனம் புரியாத உணர்வு மனதை ஆட்கொண்டது.

யானை தலையை ஆட்டி கொண்டு முன் வர, மேள தாளத்துடன் பல்லக்கு உற்சவரை சுமர்ந்து கொண்டு ஒய்யார நடையில் வர, மக்கள் பல்லக்கின் பின்னே நடந்துவர அந்த நொடி அரமண்ணைக்குள் இருக்கிறோமோ என்ற உணர்வை உண்டாக்கியது.

சிறிது நேரம் அந்த காட்சிகளை கண்டுவிட்டு ஒரு மன்னனை போல பிரகாரத்தை வலம் வந்த சுப்ரமண்யர் ஏக பாதத்தில் 48 நாட்கள் யோக நிலையில் இருந்து நின்ற நிலையிலே சமாதி அடைந்த குமாரபர்வத உச்சியை காண மனம் நடை போட தொடங்கியது

தொடரும் ..

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக